தலைவர் S.சமரசபாண்டியனின் மறைவை ஒட்டிய இரங்கல் கூட்டம்
கோவையிலுள்ள மனவளர்ச்சி குன்றியோரின் பெற்றோர்களின் அமைப்பான சாரதி பேமேக்கின் நிறுவன தலைவரும் (Founder President ) தற்போதைய தலைவருமான (President) திரு.S.சமரசபாண்டியன் தஞ்சாவூரில் கடந்த 03/02/2023 அன்று இயற்கை எய்தினார்.
அதன் பொருட்டு சாரதி பேமேக் அவருக்கான இரங்கல் கூட்டத்தை 12/02/2023 ஞாயிறன்று காலை 10.30 மணியளவில் குஜராத்தி சமாஜிலுள்ள மேத்தா ஹாலில் ஏற்பாடு செய்திருந்தது.
கூட்டத்திற்கு சாரதி பேமேக்கின் உப தலைவரான திருமதி.உஷா விஸ்வேஸ்வரன் தலைமை தாங்கினார்.
நிகழ்வின் முதல் நிகழ்ச்சியாக சமரசபாண்டியன் அவர்களின் உருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து கூடியிருந்த அனைவரும் மலரஞ்சலி செய்தனர்.
அதன்பின் உபதலைவர் திருமதி.உஷா விஸ்வேஸ்வரன், இணைச் செயலாளர் திரு.நவநீதன், பொருளாளர் திரு.பரத் ஷா, செயற்குழு உறுப்பினர் திரு.பாரதி ஆகியோர் இரங்கல் உரை ஆற்றினார்.
அவர்களின் உரைகளில் அவரது அயராத உழைப்பும் அவரது முயற்சியால் இல்லம் திட்டத்திற்காக வாங்கப்பட்ட மல்லேகவுண்டன்பாளையம் நிலமும் முதன்மை பெற்றிருந்தன.
அதன்பின் சாரதி பேமேக்கின் வழிகாட்டியாக திகழும் Dr.MNG மணி அண்ணா அவர்கள் தனது இரங்கல் உரையில் பாண்டியன் அவர்களின் உருவப்படத்தில் அவரது கண்கள் ஒளியுடன் இருப்பதாகவும் அதனால் அவரது இல்லம் (ILLAM Project) பற்றிய கனவுகள் நிச்சயம் நிறைவேறும் என்றார்.
அவரைத் தொடர்ந்து சாரதி பேமேக் அமைப்பு துவங்கப்பட ஊக்கம் அளித்த திரு.சுரேஷ், தாளாளர், வித்யா விகாசினி வாய்ப்புப் பள்ளி, மற்றும் Dr.நரேந்திரன், Speech Therapist ஆகியோர் பாண்டியனோடு தங்களது தொடர்புகளை விவரித்து அவரது குடும்பத்தினருக்கும் சாரதி பேமேக்கிற்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தனர்.
அதனைத் தொடர்ந்து பாண்டியன் அவர்களின் நெருங்கிய நண்பரான திரு.திருநாவுக்கரசு அவர்கள் இரங்கல் உரையாற்றினார். அவரது உரையில் அவர்களுக்கிடையே இருந்த 35 ஆண்டு கால நட்பினை நினைவு கூர்ந்து தமக்கும் ஊனமுற்றோருக்கும் அவரது இழப்பு ஈடு செய்ய முடியாத இழப்பு என்று கூறினார்.
பின்பு, பாண்டியன் மிகவும் தொடர்பிலிருந்த மற்றொரு அமைப்பான இராசராசன் பண்பாட்டுக் கழகத்தின் சார்பாக திரு.ஜெகதீசன் அவர்கள் பாண்டியனுக்கு கவிதாஞ்சலி செலுத்தினார். பிறகு அவரது கல்லூரித் தோழர் திரு.மதியழகன் கண்ணீருடன் இரங்கல் உரையாற்றினர்.
UDIS அமைப்பின் சார்பாக பாண்டியனுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த திரு.சேகர் அவர்களும் இரங்கல் உரையாற்றினார்.
கூட்டம் நிறைவுறும் தருவாயில் கோவை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் திரு.வசந்த ராம்குமார் அவர்களும் பங்கேற்று மறைந்தும் மறையாத பாண்டியன் அவர்களுக்கு மலரஞ்சலி செய்து மரியாதை செலுத்தினார்.
இறுதியில் பாண்டியன் அவர்களின் அண்ணன் மகன் திரு.ரகு அவர்கள் தங்கள் குடும்பத்தின் சார்பாக ஏற்புரை ஆற்றினார்.
அவர்கள் குடும்பத்தின் சார்பாக அவரது தம்பி திரு.S.சித்தார்த், அவரது துணைவியார், மற்றும் அவர்களது மகள் செல்வி.யுவஸ்ரீ ஆகியோரும் சாரதி பேமேக்கின் பெற்றோர் உறுப்பினர்களும் சிறப்புக் குழந்தைகளும் இரங்கல் கூட்டத்தில் பங்கேற்று தங்களது அஞ்சலியை செலுத்தினர்.
தெய்வத்திரு.சமரசபாண்டியன் அவர்கள் விட்டுச் சென்ற பணிகளை செவ்வனே நிறைவேற்றுவதே அவருக்கு செலுத்தும் சிறந்த அஞ்சலி மற்றும் மரியாதை என்ற எண்ணம் அனைவரிடமும் மேலோங்கிட கூட்டம் நிறைவு பெற்றது.