சாரதி பற்றிய கவிதை
சாரதி பேமேக்
(எண்ண இயலாதோர்க்கு எண்ணிலாக் காப்பு)
சாரதி!
இதிகாசப் போர்க்களத்தில்
தளபதியைத் தாங்கிச் செல்வான் சாரதி …
வாழ்க்கைப் போர்க்களத்தில்
அன்பைத் தாங்கிச் செல்வான் சாரதி
இன்றைய உலகம்
பாசப் பொழிவில் கூட
வரவு செலவு கணக்குப் பார்க்கிறது…
ஆம்,
நம் பிள்ளைமீது
இன்று பொழியும் பாசச் செலவு
நாளை தள்ளாத வயதில்
நம்மைத் தாங்கும் பாச வரவாகலாம்
உளவியல் ரீதியாய்
இது ஒரு வரவு செலவு கணக்கு …
ஆனால்
வரவு செலவு
கணக்குப் பார்க்காமல் பாசத்தைப்
பதிவு செய்பவர்கள் நீங்கள்தான்…
ஆம்,
அன்பை உணர்ந்து
அன்பைச் செலுத்துகிற
அன்பு நெஞ்சங்களே!
போலித்தனமற்ற புண்ணியம்
செய்பவர்கள் – நீங்கள்
நெஞ்சார்ந்து வணங்குகிறேன்
சொல்லவோர் வார்த்தையில்லை …
தெய்வக் குழந்தைகள் இவர்கள்,
பிறந்தபோது மகிழ்வுற்று
தெரிந்தபோது சோர்வுற்று
புரிந்தபோது மனமுடைந்து
பின் பக்குவப்பட்டு,
இந்த மனப்போராட்டம்
இன்னொரு பெற்றோருக்கு வேண்டாம்,
உரிமையின் உன்னதத்தை உணர
இயலாதோரின்
உரிமைக்காக,
இந்த அமைப்பை
உருவாக்கியிருக்கிறீர்கள் …
சாரதி …
மனப்போராட்டத்திற்கு மருந்தாய்,
எதிர்பார்ப்பே இல்லாத
அன்பை என்றும் பொழியும் இதயமாய்,
நினைத்த இடத்திற்கு
நினைத்த நேரத்திற்கு போக முடியாத
சுழலிலும்
நினைக்க இயலாத நெஞ்சங்களைத் தாங்கும்
சுமைதாங்கியாய் …சாரதி
சார்ந்தோரை ரம்மியமாய் திகழவைக்கும் …
சாரதி
வாழ்த்த மாட்டேன், உங்கள் பணியறிவேன்
வணங்குகிறேன், தரைதொட்டு …
தொடரட்டும், சாரதியின் நலப்பணி …
இவண்
முனைவர் இராம.ஆறுமுகநாதன்
பேராசிரியர்
பி.எஸ்.ஜி. பொறியியற் கல்லூரி
கோவை