News on AGM-2022
கடந்த 18/09/2022 ஞாயிறன்று சாரதி பேமேக்கின் பொதுக்குழுக் கூட்டம் கோவை குஜராத்தி சமாஜில் உள்ள பிமானி ஹாலில் நடைபெற்றது.
இணைச் செயலாளர் முனைவர் நவநீதன் அவர்கள் வரவேற்புரை நல்கினார். செயலரின் ஆண்டறிக்கையை செயலாளர் திரு.C.S.நந்தகோபால் அவர்கள் சமர்ப்பித்தார். அதில் கடந்த ஒரு ஆண்டிற்கான செயல்பாடுகள் தெளிவாக குறிப்பிடப்பட்டிருந்தன. மேலும் சாரதி பேமேக்கின் திட்டங்கள் செவ்வனே நிறைவேறிட 15-பேர் அடங்கிய ஒரு ஆலோசனைக் குழுவை அமைத்திட முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது. அக்குழுவில் கோவையில் இருக்கும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த வல்லுநர்கள் இடம் பெறுவர் என்று அறிவிக்கப்பட்டது.
அறிக்கையின் மீதான விவாதத்திற்குப் பிறகு அவ்வறிக்கை அனைவராலும் ஒரு மனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.
தலைவர் திரு.S.சமரசபாண்டியன் சங்கத்தின் ஆரம்ப செயலாளர் திரு.சங்கர்ராமன் அவர்களை இந்த ஆலோசனைக்குழுவின் செயலராக பொறுப்பேற்றுக் கொள்ளும்படி கேட்டுக்கொண்டார். திரு.சங்கர்ராமன் அவர்களும் அப்பொறுப்பினை ஏற்றுக் கொள்ள சம்மதித்தார்.
பின் பொருளாளர் திரு.பரத் ஷா கடந்த ஆண்டிற்கான வரவு செலவு அறிக்கையை சமர்ப்பித்தார்.
விவாதத்திற்கு பின் அவ்வறிக்கையும் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
மேலும் 2022-23 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவு ஆடிட்டராக திருமதி.ப்ரியா பன்ஷாலி மீண்டும் நியமிக்கப்பட்டார்.
அதன் பின் சிறப்பு விருந்தினர்களில் ஒருவரான முதியோர் நல மருத்துவர் Dr.T.தேவராஜன் அவர்கள் சிறப்புரையாற்றி சங்கத்தினை வாழ்த்திப் பேசினார். சிறப்புக் குழந்தைகளின் பெற்றோர்கள் முதியவர்கள் ஆகும் போழ்து அவர்களுக்குரிய பிரச்சினைகளை தாம் உணர்வதாகவும் அதற்கான தீர்வுகளை கண்டறிந்து செயல்படுத்த முனைவதாகவும் தெரிவித்தார்.
முக்கிய விருந்தினராகிய கோவை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் திரு.G.வசந்த ராம குமார் தனது உரையில் தமிழக அரசின் மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்திட்டங்களை விரிவாக எடுத்துரைத்தார்.
அதன்பின் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது. அத்தீர்மானத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித்தொகையை ரூ.1500/- லிருந்து ரூ.2000/- மாக உயர்த்திக் கொடுத்த தமிழக அரசிற்கும் தமிழக முதல்வர் மாண்புமிகு M.K.ஸ்டாலின் அவர்களுக்கும் சமூக நலத்துறை அமைச்சருக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது. இத்தீர்மானத்தை திரு.சங்கர்ராமன் முன்மொழிந்தார்.
பின் செயற்குழு உறுப்பினர் திரு.தட்சிணாமூர்த்தி ILLAM திட்டத்தின் தற்போது நிலை குறித்து எடுத்துரைத்தார். மேலும் அனைவரது பங்களிப்புடன் மட்டுமே இத்திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்த முடியும் என்றும் தெரிவித்தார்.
கடந்த மே மாதத்தில் அருணோதயா அறக்கட்டளை சார்பாக சிறந்த அன்னை (Super Mom) விருது பெற்ற திருமதி.நிர்மலா சங்கர்ராமன் அவர்கள் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.
அதன்பின் 2022-24 ஆண்டுகளுக்கான சங்க நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் தேர்தல் நடைபெற்றது. தேர்தலை Dr.T.தேவராஜன் அவர்கள் நடத்தி வைத்தார்.
தேர்தலில் கீழ்கண்ட நிர்வாகிகளும் செயற்குழு உறுப்பினர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
தலைவர்: திரு.S.சமரசபாண்டியன்
உபதலைவர்: திருமதி.உஷா விஸ்வேஸ்வரன்
செயலாளர்: திரு.C.S.நந்தகோபால்
இணைச் செயலாளர்: முனைவர் திரு.P.நவநீதன்
பொருளாளர்: திரு.பரத் D.ஷா
செயற்குழு உறுப்பினர்கள்:
திரு.R.பாரதி
திரு.கணேசன்
திரு.தட்சிணாமூர்த்தி
திரு.சுதாகர்
திருமதி.இரத்தினம்
திரு.செல்வரத்தினம்
திருமதி.இந்துமதி
பொறுப்பேற்றுக் கொண்ட தலைவர் திரு.சமரச பாண்டியன் அனைவரது ஒத்துழைப்பையும் கோரினார்.
குழுமியிருந்த பொதுக்குழு உறுப்பினர்களும் சிறப்பு விருந்தினர்களும் தங்களது வாழ்த்துக்களை பொறுப்பேற்றுக் கொண்ட நிர்வாகிகளுக்குத் தெரிவித்தனர்.
இறுதியில் உபதலைவர் திருமதி.உஷா விஸ்வேஸ்வரன் அவர்கள் நன்றி நவின்றார்.